டில்லியை ஒட்டி உபி மாநிலம் ஆக்ராவில் உள்ளது தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்க்க தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தாஜ்மஹால் யமுனை நதிக்கரையில் உள்ளது. தற்போது யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறையாக யமுனா நதி வெள்ளம் தாஜ்மஹாலை தொட்டப்படி செல்கிறது.ஆற்றின் நீர் தசரா காட் மற்றும் இதிமாத்-உத்-தௌலாவின் கல்லறையிலும் நுழைந்துள்ளது. இருப்பினும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது 499.1 அடியாக உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீர் மட்டம் மெஹ்தாப் பாக், ஜோஹ்ரா பாக், ராம்பாக் போன்ற மற்ற நினைவுச்சின்னங்களை மூழ்கடிக்க வாய்ப்பிருந்தாலும், அவற்றிற்க்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகரித்துள்ள நீர் மட்டம் தாஜ்மஹால் அடித்தளத்திற்குள் நுழையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 16-ம் தேதி முதல் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மீட்பு பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 17 ஆம் நூற்றாண்டு நினைவுச்சின்னத்திற்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சம்பல் நதியை ஒட்டிய ஆக்ராவின் அண்டை கிராமங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.