மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்தபடியே உள் இருந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு நீர் வ ரத்து 71,266 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 49,379 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
8 மணிக்கு பின்னர் நீர்வரத்து 1 லட்சம், பின்னர் 1.5 லட்சம் என அதிகரித்தது. எனவே நீர் வெளியேற்றமும் அதிகரித்து உள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக 1.5 லட்சம் கனஅடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே திருச்சி மாவட்டத்தின் காவிரி , கொள்ளிடம் ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்ணீரின் நின்று செல்பி எடுப்பது, ஆற்றில் நீந்துவது, துணி துவைப்பது போன்றவற்றை செய்ய வேண்டாம் என அரசு எச்சரித்து உள்ளது.
ஆற்றங்கரையோரம் மக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கேட்டுக்கொண்டுள்ளது. திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி கரைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கீதாபுரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கீதாபுரம் பகுதிகளில் திருச்சி தெற்கு காவல் துணை ஆணையர் விவேகானந்தா மிஸ்ரா,உதவி ஆணையர் நிவேதா லட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.