பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரிசெல்வராஜ். இவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதோடு மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் நேரில் சென்று உதவி வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம். சேதம் அதிகமாக உள்ளது. சுற்றிலும் தண்ணீர் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதே மக்களுக்கு தெரியவில்லை” என்று கூறினார். இதனிடையே நெல்லையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடச் சென்றபோது, இயக்குனர் மாரி செல்வராஜும் அவருடன் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மாரி செல்வராஜ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிவிட்டுள்ளார்.