நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தினார். பின்னர் நேற்று காலை சென்னை திரும்பிய முதல்வர் அதிகாரிகளை கூட்டி, வெள்ள சேதம், நிவாரணப்பணி குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் தென் மாவட்டங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் காணொளி மூலம் விசாரித்தார்.
நேற்று மாலையே மதுரை சென்று இன்று தூத்துக்குடி செல்வதாக முதல்வர் திட்டமிட்டு இருந்தார். கடைசி நேரத்தில் அவரது சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இன்று காலைகாலை 10.15 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். காலை 11.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறார். அங்கு முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து விசாாிக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
பின்னர் நெல்லை மாவட்டத்திலும் ஆய்வு செய்கிறார். ஆய்வை முடித்து கொண்டு இரவு 9.25 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.