பெஞ்சல் புயல் கரைகடந்தபோது கடலூர் விழுப்புரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கார் மூலம் விழுப்புரம் விரைந்தார். வழியில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கடப்பாக்கம் என்ற இடத்தில் திரண்டிருந்த மக்களை பார்த்த முதல்வர் ஸ்டாலின் காரை விட்டு இறங்கி மக்களிடம் மழை சேதம் குறித்தும், அங்கு நடைபெற்று வருகிற நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் விழுப்பரம் புறப்பட்டு சென்றார். வழியில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள சேத நிலவரங்களையும் முதல்வர் ஆய்வு செய்தார். காரில் செல்லும்போது காணொளி மூலம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்டு கடலூர் மாவட்ட வெள்ள சேதம், அங்கு நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து கேட்டார்.