Skip to content
Home » திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

கேப்டன் விஜயகாந்த், திமுக,அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் கடுமையாக தாக்கி அரசியல்  செய்தார். தமிழக அரசியல் வரலாற்றில் அவர் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். யாரையும் காப்பி அடிக்காமல் தனி பாதை அமைத்தார்.  எந்த பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்க அவர் தன் சொந்த உழைப்பையும், முயற்சியையும் நமபியே  தேமுதிக என்னும் கட்சியை உருவாக்கி லட்சோப லட்சம் தொண்டர்களை தன் பக்கம் இழுத்தார். இத்தனைக்கும் அவர்  ஆரம்பத்தில் திமுக  தீவிர தொண்டர். அதன்  காரணமாகவே அவர் ஒரு தமிழ் பற்றாளராக விளங்கினார்.

திமுக தொண்டர் எப்படி  திமுகவை எதிர்த்து அரசியல் செய்தார் என்பதை பார்ப்போம்.  மதுரையில் அழகர்சாமி – ஆண்டாள் தம்பதியின் நான்கு குழந்தைகளில் மூன்றாவதாக 1952 ஆகஸ்ட் 25-ல் பிறந்தவர் விஜயகாந்த். இயற்பெயர் விஜயராஜ். கைக்குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்த இவருக்கு அதிக செல்லம் கொடுத்தார் அழகர்சாமி. இளம் பருவத்தில் குறும்பு அதிகம். படிப்பில் ஈடுபாடு இல்லை. வகுப்புக்கு வகுப்பு பள்ளி மாறினாலும் கடைசிவரை படிப்பில் ஆர்வம் ஏற்படவில்லை.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் சிறுவனாக இருந்த  விஜயகாந்த்,  எல்லா இளைஞர்களையும்போல  திமுகவில் ஈடுபாடு காட்டத்தொடங்கினார்.  இரண்டு முறை மதுரை நகராட்சி கவுன்சிலராக இருந்த அழகர்சாமி, மூன்றாவது முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்காக வேலைபார்த்து, சொந்தத் தந்தையையே தோற்கடித்தார் விஜயகாந்த். அந்த அளவுக்குத் திமுக மீது  தீவிர பற்று கொண்டிருந்தார். இவரது திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி தான். அந்த அளவு திமுகவையும், கருணாநிதியையும் நேசித்தவர் விஜயகாந்த்.

விஜயகாந்த்துக்க  படிப்பில் ஆர்வமில்லை என்பதை உணர்ந்த அழகர்சாமி தனது அரிசி மில்லைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை விஜயகாந்திடம் ஒப்படைத்தார். தொழிலாளர்களுடன் தொழிலாளியாக மூட்டை தூக்குவது, மில்லிலேயே படுத்துக்கொள்வது என்றிருந்த விஜயகாந்த், வேலை நேரம் போக மீதி நேரங்களில் நண்பர்கள் கூட்டத்துடனே சுற்றித்திரிவார்.

நண்பர்களுடன் அவர் கொட்டமடித்த, மதுரை மேலஆவணி மூலவீதியில் ‘சேனாஸ் ஃபிலிம்ஸ்’ என்ற ஒரு பட விநியோக நிறுவனம் இருந்தது. அதன் உரிமையாளர் முகமது மர்சூக், “தம்பி, நீங்க ரஜினிகாந்த் மாதிரியே இருக்கீங்க” என்று சினிமா ஆசையைத் தூண்டினார். மர்சூக் விநியோகஸ்தராக இருந்த ஒரு படத்தின் வெற்றி விழாவுக்கு வந்த ரஜினியை நேரில் பார்த்ததும் உத்வேகம் தந்தது. மர்சூகின் நண்பரும் இயக்குநருமான எம்.ஏ.காஜாவின் மூலம், ‘இனிக்கும் இளமை’ படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. விஜயகாந்த் ஆனார் விஜயராஜ்

தனது வருவாயில் பெரும்பகுதியை  ரசிகர் மன்றங்கள் வாயிலாக நலத்திட்ட உதவிக்காக வழங்கிய விஜயகாந்த், 1990-க்கு முன்பே ஈரோட்டில் இலவச மருத்துவமனை, புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டினார். சுமார் 30 ஆண்டுகளாக சென்னை கோயம்பேட்டில் ஞாயிறுதோறும் அன்னதானம் வழங்குகிறார். தவிர கார்கில் போர், குஜராத் பூகம்பம், ஒடிஷா வெள்ளம், ஆந்திரப் புயல், கும்பகோணம் தீ விபத்து, சுனாமிப் பேரழிவு என்று எல்லாவற்றிலும் முதல் ஆளாக நிதி கொடுத்து, பெரிய நடிகர்களும் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார். எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பள்ளிக்கு வருடந்தோறும் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். அந்த மரியாதைதான் எம்ஜிஆரின் பிரச்சார வேன், விஜயகாந்திடம் கைமாறக் காரணம்.

 

திடீரெனக் கட்சி தொடங்கியவர் அல்ல விஜயகாந்த். 15 வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட அவர், நடிகரான பிறகும் (1979) அரசியலை ஒதுக்கியதில்லை. 1985-களிலேயே தனது ரசிகர் மன்றத்தையும் ஒரு அரசியல் இயக்கம்போல  உருவாக்கினார். மன்ற நிகழ்ச்சிகளில் தானே கலந்துகொண்டு உதவிகள் வழங்கியவர், மன்றத்துக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.

 

திமுக, அதிமுகவை மட்டுமின்றி, அக்கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி வைக்கும் கட்சிகளையும் சரமாரியாகச் சாடிய அவர், “ஊழலை ஒழிப்பேன். மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி வைப்பேன்” என்று பிரச்சாரம் செய்தார். பாமகவின் கோட்டையான விருத்தாச்சலத்தில் வெற்றி வாகை சூடினார். கட்சி ஆரம்பித்த ஏழே மாதங்களில் தமிழகம் முழுக்க 28 லட்சம் வாக்குகளைப் (8.38%) பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரும்கட்சியாக தேமுதிகவை நிலைநிறுத்தினார்.

 2011 தேர்தலில் ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த அவர், போட்டியிட்ட  29-ல் வென்று, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். முதல் முறையாக சட்டசபை கூடியபோதே, ஜெயலலிதாவின் பேச்சால் கோபமடைந்து, சினிமா பாணியில் நாக்கைத் துருத்திப் பதிலடி கொடுத்தார்.  சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான  ஜெயலலிதாவை பார்த்து மற்றவர்கள் எதிர்த்து பேச அஞ்சும்போது, விஜயகாந்த் மட்டுமே துணிச்சுலுடன் பதிலடி கொடுத்தது அன்றை அரசியலில் பரபரப்புடன் பேசப்பட்டது. விஜயகாந்தின் இந்த பதிலடி ஜெயலலிதாவை அதிர்ச்சிக்கும், ஆத்திரத்துக்கும் உள்ளாக்கியது என்பார்கள். இதை பொறுக்க முடியாத ஜெயலலிதா  பதிலுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 9 தேமுதிக எம்எல்ஏக்களை அதிமுகவுக்கு இழுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் காலிசெய்தார் ஜெயலலிதா.

2014 மக்களவைத் தேர்தலிலும், 2016 சட்ட மன்றத் தேர்தலிலும் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பட்டிமன்றமே நடக்கும் அளவுக்குக் கட்சிகளைக் காக்கவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!