மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17ம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து தின்நதோறும் மாயூரநாதர் ஆலயம் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சந்திரசேகர சுவாமிகள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் பத்து நாள் உற்சவம் சிவாலயங்களில் இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயங்களில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் கொடிமரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டது.
பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து துலா உற்சவ கொடி மரத்திற்கும் விநாயகர் கொடிமரத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆலயத்தில் தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா மற்றும் தீர்த்தவாரி, வருகின்ற 10ம்தேதி மயிலம்மன் பூஜை, 12ஆம் தேதி திருக்கல்யாணம், 14ம்தேதி திருத்தேர், 15 ம் தேதி பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவுமும், 16ம் தேதி முடவன் முழுக்கு உற்சவமும் நடைபெறவுள்ளது இதேபோல் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் துலா உற்சவத்தை முன்னிட்டு ரிஷப கொடியேற்றப்பட்டது கொடிமரத்தின் முன்பு விநாயகர், சண்டிகேஷ்வரர் எழுந்தருள செய்யப்பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவது தலமுமான இக்கோவிலில், இன்றிலிருந்து கடைமுக தீர்த்தவாரி நாள் வரை தினந்தோறும் உற்சவமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு திருஇந்தளூர் நான்கு கால் மண்டபம் பகுதியில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில், பரிமள ரெங்கநாதர் உற்சவ மூர்த்திகள் கோயில் பிரகாரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள செய்யப்பட்டார். தொடர்ந்து,
பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்வித்து மகாதீப ஆராதனை காண்பித்தனர். தொடர்ந்து துலா உற்சவ விழாவுக்கான தொடக்கமாக கருட கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.