ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்து சிறை பிடித்தனர். இதில் பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை பகுதியை சேர்ந்த நான்கு நாட்டுப் படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
இதில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்று அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி கொளுத்தும் வெயிலில் கதறி அழுதனர். பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளும் அழுதபடி தாயுடன் போராட்டத்திற்கு வந்தனர். அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். ஜூலை 5-ம் தேதி சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபடவுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி 5-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.