Skip to content
Home » இலங்கை ராணுவம் தாக்குதல்…. நாகை செருதூர் மீனவா்கள் ஸ்டிரைக்

இலங்கை ராணுவம் தாக்குதல்…. நாகை செருதூர் மீனவா்கள் ஸ்டிரைக்

  • by Senthil

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் செருதூர் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிகொடுத்தனர்.

அந்த அதிர்ச்சி விலகுவதற்குள்ளாக கடந்த 10-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த செருதூர்  மீனவர்களின்  ஃபைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி  தள்ளியதில்  நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். நல்லவேளையாக அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய அந்த நான்கு மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை கண்டிக்கும் விதமாகவும் செருதூர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி, கடலுக்கு ஏற்கனவே மீன்பிடிக்கச் சென்றவர்கள்  கரை திரும்பிய நிலையில், இன்று புதிதாக யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் செருதூர் பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மத்திய – மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை அரசுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என செருதூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!