தமிழ்நாடு மீனவர் நல வாரிய பொதுச்செயலாளர் அதிராம்பட்டினம் தாஜூதீன் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஓஎன்ஜி சிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழக மீனவர்களை மிகப்பெரிய வாழ்வாதார இழப்பிற்கு வழிவகைசெய்துவிடும். இதனை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என பாரத பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இலங்கை அரசால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வரும் மீனவர்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
தமிழக கடல் பகுதியில் உள்ள மீன் வளங்கள் இதனால் இழக்க நேரிடும். அத்துடன் மீன்கள் நச்சுத்தன்மை ஏற்பட்டு மக்களுக்கு கெடுதலை உருவாக்கி விடும். மேலும் தமிழக கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளாக டீசல் விலை உயர்வினாலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுகளையும் மீனவர்களையும் இலங்கை கைது செய்வதாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
தமிழக அரசு சில நலத்திட்டங்கள் மூலம் மீனவர்களை காப்பாற்றி வரும் நிலையில் , கடலில் எண்ணை எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். மிகப்பெரிய வளம் மிக்க நமது கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்காமல் மக்களுக்கு புரத சத்தான மீன்கள் நச்சுத்தன்மையுடன் கூடிய மாசு இல்லாமல் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.