ராமநாதபுரத்தில் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க.வினருக்கு அறிவுரைகள் வழங்கினார். தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொருவரும் தினமும் பணியாற்ற வேண்டும் என்றும், 40 தொகுதிகளிலும் வெல்வதை லட்சியமாக வைத்து செயல்பட வேண்டும், உங்களுக்கான அங்கீகாரத்தை கட்சி வழங்கும் என சூளுரைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று மாலையில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் சென்றார். அங்கு தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு, மண்டபம் செல்கிறார். அங்கு முகாம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் மீனவர்கள் நல மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காலை 10 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்கள் மண்டபத்தில் இன்று நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் பங்கேற்று மீனவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 4,184 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ரூ.24 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரத்து 315 மதிப்பீட்டிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 1,299 பயனாளிகளுக்கு மானியத்தில் படகு கட்டுதல் மற்றும் (பி.எம்.எம்.எஸ்.ஒய்) நலத்திட்ட உதவிகளும், 6 ஆயிரத்து 608 பெண்களுக்கு மகளிர் நலத்திட்டங்கள் உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 609 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.