நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7,ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரையும் அவர்களது இரு விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மற்றும் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தமணி, ராஜா, ரவி, மதிபாலன் படகு உரிமையாளர் வேல்மயில் உள்ளிட்ட 16 பேரை இலங்கை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்து நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்களது வாழ்வாதாரமான படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் விடுவித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
