கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு 2 நாட்களாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன. ‘பெரும்பாறை’ எனப்படும் பெரிய வகை மீன்கள் கிடைத்து வருகின்றன. கடலூர் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 200 டன் அளவிற்கு பெரும்பாறை மீன்கள் கிடைத்தன.
டன் கணக்கில் மீன்கள் கிடைத்ததில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட சிறிய பைபர் படகுகள் கடலுக்கு வரவழைக்கப்பட்டு மீன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒரு மீன் 8 கிலோ முதல் 80 கிலோ வரை எடையில் இருக்கும். அதிக அளவில் கிடைத்துள்ளதால் பெரும்பாறை மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.400 வரை விற்கப்படும் பெரும்பாறை மீன்கள் இன்று 100 ரூபாயாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து பெரும்பாறை மீன்களை வாங்கிச் செல்கின்றனர். வலைகளில் 10, 15 டன் மீன்கள் கிடைப்பதே அரிதான நிலையில் நூற்றுக்கணக்கான டன் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.