மீன்களின் இனப்பெருக்க காலம் என மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவித்துள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க கூடாது. இந்த நாட்களில் மீனவர்கள் தங்களின் மீன்பிடி வலைகள், படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுபவர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது 45 நாட்களாக குறைக்க வேண்டும். காரணம் போதிய அளவு மீன்கள் பிடிபடாத நிலையில் மீனவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் தங்கி உள்ளனர் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஆண்டு தடைக்காலத்தை ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை ஒரு மாதமும், மழை, புயல், இயற்கை சீற்றம் ஏற்படும் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு மாதமும் என 2 முறையாக தடைக்காலத்தை மாற்றி அமல்படுத்த வேண்டும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டும் வழக்கம்போல வரும் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளதால் மீனவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும், மீன்பிடித் தடைக்காலத்தில் தங்கள் படகுகளை கரைக்கு ஏற்றி மராமத்து செய்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர். படகுகளை பராமரிக்க அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உட்பட பகுதிகளில் 4500 நாட்டுப் படகுகளும், 147 விசைப்படகுகளும் உள்ளது. கஜா புயலுக்கு முன்னதாக 500க்கும் மேற்பட்ட விசை படகுகள் இருந்த நிலையில் தற்போது 147 விசைப்படகுகள் உள்ளது. மீன் பிடி தடைகாலத்தை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது