Skip to content
Home » முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் தொடங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இன்று முதல் போட்டி நடைபெறுகிறது.

தச்சன்குறியில் இன்று போட்டி நடைபெறும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அருணா, போட்டி நடக்கும் இடத்தை பார்வையிட்டிருந்தார். முதல் போட்டியை இந்த கிராமத்தில் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜன.4ம் தேதி போட்டியை நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான அனுமதி கோரிய கடிதத்தை விழாக்குழுவினர் வழங்கியிருந்தனர். போட்டிக்கான அனுமதி கிடைத்ததையடுத்து அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.

காளைகளை அழைத்து வரும் வழி, மருத்துவ குழுவினருக்கான இடம், ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கான இடம், காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதி, காளைகளை அடக்கும் இடம், பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட ஆட்சியர், மாநில அரசு வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளையும் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து போட்டி நடத்துவதற்கான இறுதி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முதல் ஜல்லிக்கட்டு என்பதால் எந்த சேதமும் ஏற்படாமல் போட்டியை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 600 காளைகள் வரையும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் போட்டியை காண 10000 பேர் வரை பங்கேற்பார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது கோட்டாட்சியா், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா், வட்டாட்சியா், காவல் ஆய்வாளா், வருவாய் ஆய்வாளா் ஆகியோரும் உடன் இருந்தனர்.

மாடுபிடி வீரர்களுக்கான அனுமதியை பொறுத்த வரை, ஏற்கெனவே ஆவணங்கள் அனைத்தும் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு, சரிபார்க்கப்பட்டிருக்கிறது. இதற்கான நகல் இன்று காலை வருவாய் துறையினர் போட்டி நடக்கும் இடத்தில் வழங்குவார்கள்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெறும் முதல் போட்டி இது என்பதால், போட்டியை காண புதுக்கோட்டை மட்டுமல்லாது தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் தச்சன்குறிச்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். தச்சன்குறிச்சியை தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறும். பொங்கலை ஒட்டி அலங்காநல்லூர் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.