அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (43). விவசாயி. இவர் மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்துவருகிறார். தற்போது அந்த கரும்பு அறுவடைக்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் 1 ஏக்கர் அளவில் கரும்பை வெட்டி ஏற்றியுள்ளார். தொடர்ந்து மற்ற 2 ஏக்கர் கரும்பையும் அறுவடை செய்ய இருந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் அவரது வயலுக்கு தீ வைத்துவிட்டனர். இதனால் 2 ஏக்கரில் இருந்த கரும்பு மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்காக போடப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான பைப் லைன் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இது குறித்து மணிவேல் கீழப்பழுவூர் போலீசில் புகாரும், அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளார்.
முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து மணிவேல் கூறுகையில், விவசாயத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், தற்பொழுது தனது வயலில் தீவைக்கப்பட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடனை அடைக்க முடியாமல் இருப்பதால் தமிழக அரசு நிவாரண உதவி செய்யவும், வயலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.