Skip to content
Home » ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ, நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ, நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

  • by Authour

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் வயர்கள் தீப்பற்றி கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஸ்டெச்சர் மூலம் அவசர அவசரமாக முதல் தளத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ஐந்து தளங்களில் பல்நோக்கு சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது.

நேற்று  இரவு சுமார் 10 மணி அளவில் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு மின்சார வயர்களில் எரிந்து புகை வெளியாகியது. இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை நோயாளிகள், ஆண்கள் பெண்கள் பிரிவு உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரம் செல்ல செல்ல மின் வயர்களில் இருந்து வெளியாகிய புகையின் அளவு அதிகரித்தால் இரண்டாவது தளம் முழுவதும் கரும்பு புகை சூழ தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இரண்டாவது தளத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு புகை சூழந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் டார்ச் லைட் மற்றும் அவசர விளக்குகளை பயன்படுத்தி இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சர் பயன்படுத்தியும், தூக்கி கொண்டும் முதல் தளத்துக்கு அழைத்து வந்தனர். இதில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த ஒரு சில நோயாளிகளுக்கு முதல் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீ பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் மின் கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறை மற்றும் நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ள அறைகளை பார்வையிட்டு நோயாளிகளின் உறவினர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர்.