கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள சோலார் பிளான்ட் அருகே, சூயஸ் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்காக தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கழிவுகள், கால்வாய் அமைக்க பயன்படுத்தும் பொருட்களின் சேமிப்பு கிடங்கு அருகே போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென அந்த பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்தன. தீ மளமளவென பரவியதால், உக்கடம் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாயினர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை ஓரளவிற்கு அனைத்து உள்ளனர். இருப்பினும், பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகவே காட்சி அளித்தது. அதனால் தற்போது கூடுதல் தீயணைப்பு துறையினர் வர வழைக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
