அரியலூர் நகரிலுள்ள சின்னகடை தெருவில் சுகுமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்தா என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடையில் இருந்து புகை வெளிவருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், சுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சுகுமார் கடையை திறந்து பார்த்தபோது, மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அரியலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியது. இதுகுறித்து அரியலூர் நகர காவல் நிலையபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.