அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்து துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து தண்ணீர் விநியோகித்தல், குழிக்குழாய் நீர் விநியோகக் குழாயில் பழுது போன்றவற்றை கண்காணித்து உடனடியாக சரிசெய்திட சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளை கண்காணித்து குறை இருப்பின் சுகாதார பணியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக 20 கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள், செயல் அலுவலர்கள் மூலமாக 18 களப் பணியாளர்கள், நகராட்சி ஆணையர்கள் மூலமாக 52 களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட களப்பணியாளர்கள் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசு உற்பத்தியிடங்களை அழித்தல், அப்புறபடுத்துதல் டெமிபாஸ் மருந்திட்டு லார்வாக்களை அழித்தல் மற்றும் புகைமருந்து தெளித்தல் போன்ற பணிகளை சுகாதாரத்துறை ஊழியர்கள் தினசரி ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும். இதன் மூலமாக கொசுபுழு இல்லாத நிலையினை உருவாக்கி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்.
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் தேசிய ஊரக நலப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் பொது சுகாதாரத் துறையுடன் சேர்ந்து தூய்மைபணி (Mass Cleaning) மேற்கொள்ளவேண்டும். மேலும், அந்த சமயத்தில், காய்ச்சல் தடுப்பு முகாமும் நடத்தப்பட்டு அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படவேண்டும்.
பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் அரசு மருத்துவமனைகள் அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று முறையான சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் காய்ச்சலால் வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர், கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
காய்ச்சல் தொடர்பாக அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் நோய் ஆய்வுப்பணி பிரத்தியேகமாக சுகாதார ஆய்வாளர்களை ஈடுபடுத்தி அதன் விபரங்கள் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டவுடன் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தொற்றுநோய்கள் குறித்தும் அவைகள் பரவும் விதம் குறித்தும், பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத் துறையின் மூலமாக பொதுமக்களுக்கு நேரிடையாகவும் பல்வேறுபட்ட ஊடகங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அரியலூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்குகாய்ச்சல் பாதிப்பு வராமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.