பருவகால காய்ச்சலை பரப்பி வரும் புதிய வகை `எச்-3 என்-2′ வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் என்று ஆஸ்பத்திரிகளுக்கு ஏராளமானவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருவதை பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் சிறுவர்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த முதியவர்களையும் அதிகம் பாதிக்கிறது. சிறுவர்களை தாக்கினாலும் 3 முதல் 5 நாட்களுக்குள் சீராகிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொது மருத்துவத்துறை சார்பில் சென்னையில் 50 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இன்புளுயன்சா காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த காய்ச்சல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வேகமாக பரவி வருவது தெரிய வந்திருக்கிறது. மருத்துவ ரீதியாக இந்த காய்ச்சலின் தாக்கத்தை பொறுத்து 3 வகையாக பிரித்துள்ளார்கள் ஏ-டைப் லேசான காய்ச்சல், பி-டைப் மிதமான காய்ச்சல், சி-டைப் தீவிரமான காய்ச்சல். இதில் சி-டைப் காய்ச்சல் வயதானவர்களிடம் தான் காணப்படுகிறது. இவர்களுக்கு சுவாச பிரச்சினையையும் ஏற்படுத்துவதால் கட்டாயம் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் இருமல், உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒன்றிரண்டு வாரங்கள் வரை சிரமப்பட வைப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தீவிர சுவாச தொற்று பிரச்சினை உடையவர்களில் 50 சத வீதம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சை பெறுபவர்களில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல், 86 சதவீதம் பேருக்கு இருமல் 27 சதவீதம் பேருக்கு சுவாச கோளாறு அறிகுறியும் தெரியவந்துள்ளது. 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவையும் ஏற்பட்டுள்ளது.
இந்த தொற்று ஏற்பட்டு இருப்பவர்களுக்கு காய்ச்சல், இடைவிடாத இருமல், தொண்டை வலி இருக்கும். வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இதுவே இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாகும். இதில் இருந்து எப்படி தப்பிப்பது? கைகளை அடிக்கடி சோப்புபோட்டு கழுவ வேண்டும். இருமல்-தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவேண்டும். மற்றவர்களுடன் கை குலுக்கு வதை தவிர்க்க வேண்டும். எங்கு பார்த்தாலும் காய்ச்சல், இருந்தாலும் வெளியே சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் வெளியே செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்.
கூட்டங்களில் போக கூடாது. கைகளால் மூக்கு, கண்களை தொடக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கும் தொற்றும் அபாயம் உண்டு. எனவே வீட்டில் மிக நெருக்கமாக அமர்ந்து சாப்பிடுவது, அருகில் படுத்து தூங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிந்து கொண்டு வீட்டுக்குள் நடமாட வேண்டும். வைரஸ்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாக பரவும். எனவே காய்ச்சல் பாதித்தவர்கள் குடும்பத்தில் இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். முக கவசம் அனைவரும் அணிய வேண்டும். காய்ச்சல் பாதித்தவர்கள் பயன்படுத்திய சாப்பாட்டு தட்டுகள், துண்டுகள் போன்றவற்றை பயன் படுத்தக்கூடாது. இந்த காய்ச்சல் சாதாரணமானது. `டாமிபுளு’ `பாரா சிட்டமால்’ மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகள் தேவையான அளவுக்கு அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இருப்பு உள்ளது என்றார் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம். அதிகமான மாத்திரைகளை சுயமாக வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இணை நோய் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் தொற்றால் வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உண்டு.