வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5 மணி அளவில் புயலாக உருவாகிறது. இதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் 30ம் தேதி கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் அறிவித்து உள்ளனர்.
புயல் தமிழ்நாட்டில் தான் கரையை கடக்கும் என்பது உறுதியாகி விட்டது. தமிழ்நாட்டில் எங்கே கரையை கடக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சென்னைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்றும், சென்னைக்கும் மரக்காணத்துக்கும் இடையே கடக்கலாம் என்றும், சென்னை-பரங்கிப்பேட்டை இடையே கடக்கலாம் என்றும் பலவித தகவல்கள் வெளியாகி வருகிறது.
புயல் உருவான பின்னர் தான் அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை துல்லியமாக அறிவிக்க இயலும். எனவே இன்று இரவு சரியாக தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் காரணமாக சென்னையில் இருந்து மயிலாடுதுறை வரை 29,30ம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் புயல் கரையை கடக்கும்போது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகத்தான் கரையை கடக்கும் என்பது தான். எனவே அதிக காற்று இருக்காது என்று தற்போதைய தகவல் கூறுகிறது.