பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் இந்த கோரிக்கையை பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன். இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.