சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் குற்றவாளி ஜெயந்தி (32) என்பவரை கடந்த அக்டோபர் 17-ம் தேதி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை பெண் சிறை காவலர்கள் கனகலட்சுமி மற்றும் கோகிலா ஆகிய இருவரும் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட பெண் கைதி ஜெயந்தியை பார்வையாளர்கள் அறையைச் சுத்தம் செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.
குறிப்பாக, பார்வையாளர்கள் அறையைச் சுத்தம் செய்ய புழல் சிறையில் இருந்து வெளிப்புறமாக வந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிகிறது. அப்போது அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த கைதி ஜெயந்தி போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சிறைக்காவலர்கள் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த சிறைத்துறை காணிப்பாளர் பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தியனர்.அத்துடன் கைதி ஜெயந்தி தப்பிச் சென்றது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கைதி ஜெயந்தி பிடிக்க இரண்டு தனி படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு தனிப்படையினர் கர்நாடகா மாநிலத்திற்கும், மற்றொரு தனிப்படையினர் புழல் சிறை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இச்சம்பம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பெண் கைதி தப்பிச் செல்ல காரணமான பெண் சிறை வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பிச் சென்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.