பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்ட பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டில்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் தனது கணவர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது தொடர்பாக அவரது மனைவி ஜோன் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில் “சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த எனது கணவர் ஜெரால்டு நெறியாளர் என்பதற்காக வழக்குகளில் உடன் வழக்காளியாக சேர்க்கப்படுகிறார். அந்த பேட்டியை அவர் உள்நோக்கத்துடன் பதிவு செய்யவில்லை. இந்த நேர்காணலை பதிவு செய்ததற்காக கடந்த மே.15ம் தேதி நான் வருத்தம் தெரிவித்துள்ளேன். அந்த காட்சியும் நீ்க்கப்பட்டுவிட்டது. கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது. மேலும் கடந்த மே 14-ம் தேதி போலீசார் நடத்திய சோதனையின் போது வழக்குடன் தொடர்பில்லாத எங்கள் சொத்து ஆவணங்கள், புகைப்படக்கருவிகள், கணிப்பொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், எங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பெலிக்ஸ் ஜெரால்டு மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெற்று, அவர் சிறையில் இருந்து விடுதலை பெற வழிவகை செய்ய வேண்டும். மேலும் காவல்துறை தரப்பில் பெலிக்ஸ்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. விசாரணையின் பெயரில் காவல்துறையினர் எங்கள் வீட்டில் வந்து அச்சுறுத்துகின்றனர், எங்களை காவல்துறை துன்புறுத்துகிறது. நடந்த சம்பவத்துக்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டோம். எனவே எங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் மிரட்டுகின்றனர்.. பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு..
- by Authour