பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்ட வீடியோவில் சவுக்கு சங்கரிடம் பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டில்லியில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்த திருச்சி போலீசார் நேற்று திருச்சி அழைத்து வந்தனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயசுதா முன்னிலையில் பெலிக்சை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது பெலிக்ஸ் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேவை என்றால் சம்மந்தப்பட்ட வீடியோவை தனது ரெட் பிக்ஸ் யூடியூபில் இருந்து டெலிட் செய்து விடுவதாக கூறினார். இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பெலிக்ஸ் ஜெரால்டு பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீசார் சிலர் நீதிபதி ஜெயபிரபா முன்னிலையில் ஆஜராகி கூறியதாவது:
சம்மந்தப்பட்ட வீடியோவை நீதிபதி பார்க்க வேண்டும். இந்த வீடியோவால் பெண் போலீசாரின் குடும்பத்தில் மன உளச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது வீடியோவை டெலிட் செய்து விடுவதாக கூறும் நபர் இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார். இனி வீடியோவை டெலிட் செய்வதால் எந்த பலனும் இருக்கப்போவதில்லை. பலரும் டவுன்லோடு செய்து விட்டனர். இனி ஒருவர் இது போன்று பெண் போலீசார் மீது அவதூறு பரப்பாமல் இருக்க பெலிக்ஸ் ஜெரால்டு மீது நடடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.. இதனைத் தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டை வரும் 27ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிபதி ஜெயபிரபா உத்தரவிட்டார்.