தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி அலுவலர்களுக்கும், தமிழில் 100க்கு 100 பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சென்னையில் தமிழக அரசு பாராட்டு விழா நடத்துகிறது.
இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம் என்பதை தொடர்ந்து பறைசாற்றும் விதமாக நடப்புக் கல்வியாண்டின் பொதுத் தேர்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
மேல்நிலைத் தேர்வில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக 397 அரசு மேல்நிலைப்பள்ளிகள் இந்த ஆண்டு 100க்கு 100 தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ் பாடத்தி்ல் 35 மாணவல, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி 87.90%. 1364 அரசுப்பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்பாடத்தில் மட்டும் 8 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது ஒரு வரலாற்று சாதனை. இந்த வெற்றிக்கு காரணம் நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பல்வேறு மாணவர் மைய திட்டங்களும், சிறப்பான வழிகாட்டல்களும் ஆகும்.
எனவே சாதனை படைத்த இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வண்ணம், சென்னையி்ல் ஒரு சீர்மிகு விழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில் தமிழில் 100க்கு 100 மார்க் பெற்ற 43 மாணவ, மாணவிகளும் கவுரவிக்கப்படுவார்கள்.
இந்த விழாவில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்த தேர்ச்சி பெற்ற (கடைசி 5) ஐந்து தலைமை ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குவதுடன் 100 சதவீதம் எட்டிய தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையடல் செய்து கருத்துகள் பரிமாற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என பள்ளிக்கல்வித்துறை நம்புகிறது.