நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக அவர் நடித்து வருகிறார். அவரது கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது புதுச்சேரி பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நான் உங்களை பார்க்கிறேன். நான் உங்களை வைத்து படம் எடுக்கும் ஒரு தருணம் வரும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். சில சமயம் உங்கள் வழியாக நான் பார்க்கிறேன். பெரும்பாலும் உங்கள் வழியாக இந்த உலகத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா. உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்று நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.