தஞ்சை அடுத்த சூரக்கோட்டை அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத் தம்பி (55). கூலித் தொழிலாளி. இவரது மகன் சின்னதுரை (24). கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சின்னத்தம்பி வேலை செய்து கிடைக்கும் பணத்தில் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
வீட்டு செலவிற்கும் பணம் கொடுப்பதில்லையாம். மனைவி பணம் கேட்டால் அடித்து உதைப்பாராம்.வழக்கம் போல நேற்று இரவும் சின்னத்தம்பி போதையில் மனைவியை அடித்து உதைத்தார்.
அம்மாவை ஏன் அடிக்கிறாய் என மகன் சின்னதுரை தட்டிக்கேட்டார். இதனால் தந்தை மகனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் சின்னத்தம்பி போதையில் தூங்கி விட்டார்.
இன்று அதிகாலையில் வீட்டின் முன் பகுதியில் தூங்கிகொண்டிருந்த தந்தை சின்னத்தம்பியை மகன், சின்னதுரை அருகில் கிடந்த குழவிக்கல்லை எடுத்து வந்து தலையில் போட்டார். இதில் சின்னத்தம்பி தலை நசுங்கி அந்த இடத்திலேயே பிணமானார்.
தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.