மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ளது தானே நகரம். இங்குள்ள வாக்பில் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 62 வயது பெண் குடும்பத் துடன் வசித்து வருகிறார். உடல் பருமன், மோசமான உடல் நிலை காரணமாக அந்த பெண்ணால் எழுந்து நடக்க முடியாது. எனவே அவர் எப் போதும் கட்டிலில் படுத்து இருப்பார் .
160 கிலோ எடை உள்ள அவர், நேற்று காலை 8 மணியளவில் திடீரென கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். அவரை தூக்கி மீண்டும் கட்டிலில் படுக்க வைக்க குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் அவர்களால் தூக்க முடியவில்லை.
இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்தனர். வேறு வழியில்லாமல் அவர்கள் உதவி கேட்டு தீயணைப்பு படையினரை தொடர்பு கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுக்கையில் இருந்து தவறி விழுந்த பெண்ணை தூக்கி, மீண்டும் பத்திரமாக கட்டிலில் படுக்க வைத்தனர். இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் நிம்மதி அடைந் தனர்.
இந்த சம்பவம் குறித்து தானே பேரிடர் மேலாண்மை மைய தலைவர் யாசின் தட்வி கூறுகையில், “பெண் விழுந்தவுடன் பதற்றமடைந்த குடும்பத்தினர் எங்களை உதவிக்கு அழைத்தனர். வீரர்கள் உடனடியாக சென்று பெண்ணை மீட்டு மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். பெண் கீழே விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினருக்கு பல அவசர உதவி அழைப்புகள் வரும். ஆனால் இது சற்று வித்யாசமானது” என்றார். தானேயில் நடந்த இந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.