வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் டிராக்டர்களில் பஞ்சாப் – ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையைில் நேற்று முன்தினம் குவிந்தனர். ஷம்பு எல்லையில் இருந்து இவர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடைபயணமாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ” பேரணி டில்லியை நோக்கி அணிவகுக்கும். அரசால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி அவர்கள் சிந்திக்கும் நேரம் இது. டில்லி நோக்கிய எங்களின் பேரணி வெள்ளிக்கிழமை (இன்று) மதியம் 1 மணிக்கு டில்லி நோக்கி கிளம்பும். எங்கள் பேரணியை அரசு தடுத்து நிறுத்தினால் அது எங்களுக்கு தார்மிக வெற்றிதான். ஏனென்றால் விவசாயிகள் டிராக்டர்களில் வரவில்லை என்றால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர்கள் கூறிவருகிறார்கள். விவசாயிகள் பேரணி நடத்த திட்டமிமிட்டு உள்ளதால், டில்லி- ஹரியானா எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.