கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட பகுதியில் சில விவசாயிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளு தென்னை மரத்தில் இருந்து இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விவசாயிகளிடம் கள் இறக்குவதை நிறுத்த வேண்டும் என்று கடுமையான எச்சரித்தனர்.
கள் இறக்கும் விவசாயிகளை தீவிரவாதியை போல போலீசார் விசாரணை நடத்தியதாக புகார் தெரிவித்த விவசாயிகள் பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கள் இறக்கி விற்பனை செய்வதாகவும் கள் இறக்கும் விவசாயிகளை தொந்தரவு செய்தால் பொள்ளாச்சி காந்திசிலை முன்பு கள் விற்பனை செய்யும் முடிவை எடுக்க நேரிடும் என்று போலீசாருக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.