Skip to content
Home » பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள்  குறைதீர் கூட்டம்  தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது:

கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை அரவைப்பருவத்தை டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும்.  கரும்புக்கான சிறப்பு ஊக்க தொகையை தீபாவளிக்குள் வழங்க வேண்டும்.மரவள்ளி கிழங்கு அதிக அளவு சாகுபடி செய்யப்படுவதால் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.. முன்பு வழங்கியது போல் ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்.

ஏ கே ஆர் ரவிச்சந்திரன் : தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சம்பா பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்திய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் கட்டிய தொகைகளை அபகரித்து வருகிறது. ஒன்றிய அரசு, தமிழக அரசு, விவசாயிகள் பங்களிப்பு என ஒரு ஏக்கருக்கு ரூ.8000 பிரிமியம் தொகையாக காப்பீட்டு நிறுவனம் பெற்றுக் கொண்டு பயிர் இழப்பீடு இல்லை என கூறி சில கிராமங்களுக்கு மட்டும் குறைந்த அளவு இழப்பீடு தொகை வழங்கி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து உரிய காப்பீட்டு இழப்பீட்டை பெற்று தர வேண்டும்.

வீர ராஜேந்திரன் : திருவையாறு வட்டம் கோனேரிராஜபுரம் கிராம விவசாய நிலங்களுக்கு கடந்த பல வருடங்களாக ஆற்று நீர் பாசன வசதி இல்லை. இதுகுறித்து மனு வழங்கியிருந்தோம். வாய்க்கால்களில் நீர் வழங்க ஆவன செய்யப்படும் என நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை பாசன வசதி ஏற்படுத்தவில்லை. கடந்த 2023 ம் ஆண்டு கோனேரிராஜபுரம் தலை மதகு பகுதியில் 10.60 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைத்தனர்.இருப்பினும் கோனேரிராஜபுரம் தலை மதகு பாசன வசதி முற்றிலும் இல்லை.தடுப்பணையின் உயரத்தை விட மதகின் தரை மட்டம் அதிகமாக உள்ளது எனவே நீர் பெற முடியவில்லை. இதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனியப்பன் : நவம்பர் மாதம் விவசாயிகள் கடலை சாகுபடி மேற்கொள்வார்கள். இதற்கான விதை கடலையை அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும். வெஸ்டர்ன் 42 குஜராத் ஜே எல் ரக விதைகளை விவசாயிகள் சாகுபடி செய்வர். இதை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதில் விவசாயிகள் விடுபட்டுள்ளனர். இதை ஆய்வு செய்து விடுபட்ட விவசாயிகளை சேர்க்க வேண்டும்.

தங்கவேல்: ஒரத்தநாடு வட்டம் கல்லணை கால்வாய் பகுதியில் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் 50 நாட்கள் ஆகியும் முறையாக வரவில்லை இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. வாரம் ஒரு முறை தண்ணீர் திறந்து விடப்படுவதால் நாற்று விட்ட பகுதிகளில் அதிக வெயிலால் நாற்றுக்கள் முற்றிலும் அழிந்துவிட்டது தண்ணீரை நம்பி விதைப்பு முறையில் சாகுபடி செய்த பயிர்கள் அழிந்துவிட்டன. இது குறித்து அதிகாரிகள் உரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த மாதம் மழைக்காலம் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் முறை வைக்காமல் இம்மாதம் முழுவதும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். அனைத்து வாய்க்கால்களுக்கும் கரை காவலர் நியமனம் செய்து தண்ணீர் எங்கு அதிகம் உள்ளது எங்கு பற்றாக்குறையாக உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தது போல் தண்ணீர் விட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினர். இதனை கேட்ட கோட்டாட்சியர்  இலக்கிய ஆவன செய்யப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!