தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்துள்ளது. இதுவரை 90 சதவீதத்திற்கும் மேல் அறுவடை முடிந்து விட்டது. ஒரு சில இடங்களில் தற்போதும் அறுவடை நடந்து வருகிறது. மாவட்டத்தில் அறுவடை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் வரத்து அதிகரித்தது. இவ்வாறு விவசாயிகளிடம் இருந்து பிடிக்கப்பட்ட நெல்லை லாரிகள் வாயிலாக நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று காலை முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதில்
தஞ்சை நகர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகள் தார் பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது_ இதேபோல் ஆலக்குடி ரயில் நிலையம் அருகில் உள்ள கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளின் நெல் தார் பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய முடியாத நிலை நிலவுகிறது. மழை தொடர்ந்தால் காயவைத்த நெல் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடையும் நிலை உள்ளது.
கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் கிடங்குகளுக்கும், அரவைக்காக வெளி மாவட் டங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் ராமநாதபுரம் ஊராட்சியிலும், ஆலக்குடியிலும் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இத்தனை நாட்கள் சிரமப்பட்டு நெல்லை தூற்றி, காயவைத்துள்ள நிலையில் இந்த மழையால் நெல் நனைந்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே கொள்முதல் நிலையங்களில் தேங்கி இருக்கும் நெல் மூட்டைகளை உடன் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்ப அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.