கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அருகே வீரவல்லி, பிள்ளாபாளையம் லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
வெற்றிலையானது மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் அனைத்து சுப விசேஷ நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை முக்கிய இடம் வைக்கிறது.
இப்பகுதியில் விளைவிக்கப்படும் வெற்றிலையானது திருச்சி, பரமத்தி வேலூர் மற்றும் உள்ளூர் சந்தைகளில் ஏலம் விடப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது பனிக்காலத்தில் வெற்றிலையில் இலை சுருட்டல், கால் அழுகல் நோய், கரும்புள்ளி
நோய், செதில் பூச்சிகள் தாக்குதல் உள்ளிட்ட நோய் தாக்கத்தினால் தற்போது வெற்றிலை உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நோய்களின் தாக்கத்தினால் வெற்றிலை உற்பத்தி இல்லாமல், வெற்றிலை கொடிகள் காய்ந்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் வெற்றிலை விவசாயத்தில் ஒரு கிடங்கு அமைப்பதற்கு 5000 முதல் 7000 வரை செலவு செய்து வருவதாகவும், தற்போது இந்த அரிய வகை நோய்களின் தாக்கத்தினால் வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் முதலீடு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வெற்றிலை விவசாயிகளுக்கு இந்த நோய் தாக்கத்திலிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கவும், வெற்றிலை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.