கன்னட சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளராக வலம் வந்தவர் ஜாலி பாஸ்டியன்(57). கேரளாவில் பிறந்த இவர் 900-க்கும் மேற்பட்ட தென்னிந்தியப் படங்களில் வேலை பார்த்துள்ளார்.
பெங்களூருவில் இவரது இல்லத்தில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்தார். பைக் மெக்கானிக்காக தனது பயணத்தை ஆரம்பித்த இவருக்கு ஹெவி பைக்கில் ஸ்டண்ட் செய்வது என்றால் மிக விருப்பமான ஒன்றாக இருந்திருக்கிறது. தனது 17வது வயதில் ’பிரேமலோகா’ என்ற படத்தில் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானார்.
அதன் பிறகு ஏழு வருடங்கள் படங்களில் சிறு சிறு ஆக்ஷன் காட்சிகளைச் செய்து கொண்டிருந்தவருக்கு நடிகர் ரவிச்சந்திரனின் ‘காட்ஃபாதர்’ படம் மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது.
அதன் பிறகு தென்னிந்தியப் படங்கள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் பணிபுரிந்துள்ளார். 300க்கும் மேற்பட்டபடங்களில் அதிக அளவிலான ரிஸ்க் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்துள்ளார் ஜாலி. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாது, ‘நினைவாகி கதிருவே’ படம் மூலமாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.
இதுமட்டுமல்லாது, பாடகர் என்ற இன்னொரு முகமும் இவருக்கு உண்டு. இவரது மூத்த மகன் அமித்தும் ஸ்டண்ட் மாஸ்டர். இரண்டாவது மகன் விஹான் ‘மாஃபியா’ என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். ஜாலியின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.