ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தனசேகர்(36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும், மோனீஸ்(7) என்ற மகனும் உள்ளனர். வந்தனா கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பும், மோனீஸ் அதே பள்ளியில் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங் கோயிலில் உள்ள தனியார் காஆர்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். தனசேகர் சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனால் அவருக்கு கடன் பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை இருந்தே கணவன், மனைவிக்கு இடையே கடன் தொல்லை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் குழந்தைகளை கொன்று விட்டு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று மதியம் தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்தும் சல்பாஷ் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து மகள் வந்தனா மற்றும் மகன் மோனீசுக்கு கொடுத்து உள்ளனர். இருவரும் சிறிது குடித்த போதே கசப்பு காரணமாக கீழே துப்பி விட்டு கதறி அழுதனர். அதற்குள் தனசேகரும், பாலாமணியும் சல்பாஸ் மாத்திரைகளை தின்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர்.
குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் வழியிலேயே தனசேகரும், பாலாமணியும் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்தனாவும், மோனீசும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் ளற்பட்ட குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிறுவலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.