மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து இமிகிரேஷன் அதிகாரி பவன் குமார் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் சாந்தான்குளம் குப்பன்வலசை பகுதியைச் சேர்ந்த பாலு (வயது 58) என்பவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனையிட்டபோது அவரது பெயர் மற்றும் பிறந்தநாள் ஆகியவை போலி ஆவணங்கள் மூலம் திருத்தப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை இமிகிரேஷன் அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பாலுவை கைது செய்தனர். இதே போன்று
கோலாலம்பூரில் இருந்து வந்த இன்னொரு விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரம் பரமக்குடி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த குத்புதீன் (வயது 47) என்பவர் இமிகிரேஷன் அதிகாரிகள் பிடியில் சிக்கினார்.
அவர் தனது தாயார் மற்றும் மனைவி பெயர்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாற்றி பாஸ்போர்ட் வைத்திருந்தார். அவரையும் திருச்சி ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். மேலும் மஸ்கட்டில் இருந்து திருச்சி வந்தடைந்த இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த நேரு ( 55) என்பவரது பாஸ்போர்ட்டை வாங்கி ஆய்வுக்கு உட்படுத்திய போது அவரும் போலியாவணங்கள் மூலமாக தனது தந்தை பெயர், தாய் பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்றி பாஸ்போர்ட் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இமிகிரேஷன் அதிகாரி பவன் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேருவை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.