சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றும் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த மாதம் 24-ந் தேதி அன்று பணியில் இருந்தபோது, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு எனக்கு செல்போனில் பேசினார். அவர்தான் எனக்கு எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்பதை தெரிவிப்பார். அன்றைய தினம் அவர் பேசும்போது, பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நீ செல்கிறாயா? என்று கேட்டார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். சற்று நேரத்தில் அந்த பெண் போலீஸ் அதிகாரி உன்னிடம் பேசுவார் என்றும், உன்னிடம் நீ செய்ய வேண்டிய பணி குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவித்தார்.
அப்போது செல்போனில் பேசிய பெண் ஒருவர், தான் சென்னையில் கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றுகிறேன் என்றும், என்னை அவருக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார். மேலும்தான் சொல்லும் வேலையை பொறுப்போடு செய்தால் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வாங்கி தருவதாகவும், சொந்தமாக வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டினார். அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று திருப்பிக் கேட்டேன். அதற்கு அந்த நபர் நீ ஒரு பெரும் பணக்காரரை நான் சொல்லும் இடத்தில் சந்திக்க வேண்டும் என்றும், அவரது ஆசைக்கு இணங்கி அவர் சொல்லும்படி நடந்து கொண்டால் பதவியும், வீடும் உன்னைத் தேடி வரும் என்றும் குறிப்பிட்டார்.
அவர் இவ்வாறு பேசியது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. நான் அதுபோன்ற பெண் இல்லை என்றும், பதவி உயர்வும், வீடும் எனக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தேன்.திடீரென்று அந்த நபர் ஆண் குரலில் பேச ஆரம்பித்தார். நான் சொல்கிறபடி கேட்காவிட்டால் நீ பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினார். நான் உங்கள் மீது புகார் கொடுக்க போகிறேன் என்று தெரிவித்தேன். உடனே அந்த நபர் போன் இணைப்பை துண்டித்துவிட்டார். பெண் போலீஸ் அதிகாரி போல் பேசி என்னை மிரட்டிய குறிப்பிட்ட நபர் யார் என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் உதவி கமிஷனர் காவ்யா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஹேமா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில், பெண் போலீசை பெண் குரலில் பேசி உல்லாசத்துக்கு அழைத்த போலி போலீஸ் அதிகாரி யார் என்று கண்டறியப்பட்டது. அவரது பெயர் பெரியசாமி (வயது 32) என்றும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாராபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இது போல் செல்போனில் பெண்களிடம் பேசி ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை உல்லாச வலையில் விழவைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் மூலம் அவர் பெரிய அளவில் பணம் சம்பாதித்துள்ளதும் தெரிய வந்தது. அவர் மீது திருப்பூர், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் பெரும்பாலும் பெண் போலீசை குறிவைத்தே இந்த காரியங்களை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
பொறியாளர் பெரி்யசாமி இதுபோன்று பெண் போலீசை குறிவைத்து செக்ஸ் அழைப்பு விடுத்ததற்கு பின்னணியில் போலீஸ் அதிகாரிகள் யாரும் இருக்கிறார்களா, இவருக்கு எப்படி இந்த துணிச்சல் வந்தது என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.