Skip to content
Home » கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…

கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தொடர்புகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாவட்டத்தில் கள்ள லாட்டரி விற்பனை இல்லை என காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு கள்ள லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் தனிப்படை குழுவினர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் ஆய்வு பணிகள் நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கரூர் மாவட்டத்தில் உள்ள 18 காவல் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கள்ள லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 25,000 ரூபாய் பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து,

கரூர் நகரம், பசுபதிபாளையம், தாந்தோணிமலை, வாங்கல், குளித்தலை, அரவக்குறிச்சி, தோகைமலை உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்ந்து கள்ள லாட்டரி வியாபாரம் கரூரில் நடைபெற்று வருவதை உறுதி செய்கிறது. எனவே, தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.