நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். மூன்று பேரும்
நண்பர்கள். தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ளனர்.
விடுமுறையில் ஜெகதீஸ்வரன் என்கிற சிறுவன் தனது உறவினரின் ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அவனுக்கு ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் போது திடீரென உதித்த ஐடியாவின் பேரில் 200 ரூபாய் நோட்டை அச்சு பிசகாமல் கம்யூட்டரில் கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்துள்ளார். மேலும் இந்த நோட்டுகளை தனது நண்பர்களான சந்தோஷ் , விசுவநாதன் ஆகியோரிடம் கொடுத்து கோவில் திருவிழாக்களில் ஐஸ்கிரீம் , பொம்மைகள் வாங்கி மாற்றி வந்துள்ளனர்.
இவை கள்ள நோட்டு என கண்டுபிடித்த கடை உரிமையாளர்கள் கத்திரிபுலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் எஸ்.பி. ஹர்ஷ் சிங், டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ், கரியாபட்டினம் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் 3 மாணவர்களையும் பிடித்து இவர்களிடமிருந்து 200 ரூபாய் ,100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை ரூ 32,300 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய கம்யூட்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆகியவையும் பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.