தமிழகத்தில் உள்ள மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைக்கும்படி தமிழக மின் வாரியம் அறிவித்தது. இதற்காகடிசம் 31ம் தேதி வரை முதலில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31வரை அது நீடிக்கப்பட்டு, அதன் பிறகு மீண்டும் பிப்ரவரி 15வரை இப்போது கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகம் முழுவதும் 97.98% பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இந்த திட்டம் மிக நல்ல திட்டம் என்பதால் புதுச்சேரியிலும் இப்போது மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மின்வாரிய எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஆதார் எண் இணைப்பில் பல தில்லுமுல்லுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மின்வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக மின்வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆதாரை இணைக்கும் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததில், உரிமையாளர் / குத்தகைதாரர் / இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமல் பல வழக்குகளில் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒருவரின் அங்கீகரிக்கப்படாத மற்றும் தொடர்பில்லாத ஆதார் எண், முன்னேற்றத்தைக் காண்பிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான சேவை இணைப்புகளுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்படுகிறது.
நேற்றுமாலை 7 மணி நிலவரப்படி ஆதார் இணைப்பு முன்னேற்றம் 97.98% ஆக உள்ளது.
அதை இறுதி செய்வதற்கு முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் கள அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து, தகுதியான நபர்களின் ஆதார் எண்ணை மட்டுமே சேவை இணைப்புகளுடன் இணைக்கவும், அதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.
அனைத்து தலைமை சரியான ஆதார் எண்களை மட்டுமே இணைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.