தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை கிராமத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அன்று (27/12/2023) திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிடச் சென்றார். அப்போது, கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ரேவதியைக் கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்துப் பேசினார். அப்போது அந்த சிறுமி ‘தனக்குக் கண் பார்வையில் பிரச்சனை இருக்கிறது என்றும், அதற்கு மருத்துவச்
சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்’ என்றும் வேண்டுகோள் வைத்தார். சிறுமியின் அந்த வார்த்தையைக் கேட்டதும், உடனடியாக கண் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்.
இதன்படி, அந்த சிறுமிக்கு நேற்று (06/01/2024) திருநெல்வேலி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி எம்.பி உதவியால் அந்த சிறுமிக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்தில் உள்ள சிறுமி ரேவதியின் வீட்டிற்கு நேரில் சென்று கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எவ்வாறு உள்ளார் என நலம் விசாரித்தார். அப்போது, கனிமொழி எம்.பி சிறுமி ரேவதியிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். மேலும் கண் சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி என சிறுமி ரேவதியின் தாயும் கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு நன்றி கூறினார்.