மைசூர் – மயிலாடுதுறை விரைவு ரயில் இன்று முதல் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கான விழா மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. இந்த ரயில் சேவையை மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நீட்டிக்கப்பட்ட ரயிலை துவக்கி வைத்தார்.
பின்னர் மயிலாடுதுறை ரயில் நிலைய 3 வது நடைமேடையில் இருந்து புறப்பட்ட ரயிலை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து தினங்கள் மட்டும் இயங்கி வந்த விரைவு ரயில், இன்று முதல் வாரத்தின் அனைத்து தினங்களும் செல்கிறது. மயிலாடுதுறை – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர்- மைசூர் எக்ஸ்பிரஸாக மாறியது.
மைசூரிலிருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.40 மணி வந்தடையும் ரயில் 7 மணிக்கு மயிலாடுதுறையிருந்து புறப்பட்டு 8. 35 மணிக்கு கடலூரை சென்றடைகிறது.
மீண்டும் மாலை 3.40 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு மயிலாடுதுறை வந்தடைகிறது.
மயிலாடுதுறையிலிருந்து 5.55 மணிக்கு மைசூருக்கு புறப்பட்டு செல்கிறது. வாரம் முழுவதும் சேவை உண்டு.
மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் பேசும் பொழுது மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் துவக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கை வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பேசுகையில் நான் வைத்த முதல் கோரிக்கை மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என்பதே. டில்லியில் ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து இதற்கான மனுவையும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.