திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 12,500 அடியாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தமிழ்நாட்டின் மிக நீளமான ஓடு பாதையாகவும், நாட்டின் 5வது பெரிய ஓடுபாதையாகவும் மாற உள்ளது.
தொடர்ந்து, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆண்டுக்கு 45 லட்சம் பயணிகளை கையாளக்கூடிய வசதிகள் உள்ளது. ஒரே சமயத்தில் 10 விமானங்களில் பயணிகளை கையாள முடியும். 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்களை தரையிறக்கி புறப்படலாம். ஒரே நேரத்தில் 3,900 பயணிகளை கையாள முடியும். 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
புறப்பாடுக்காக 10 கேட்கள், வருகைக்காக 6 கேட்கள், 60 செக் இன் கவுன்டர்கள், இமிகிரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுன்டர்கள், 15 எக்ஸ்ரே மெஷின்கள், 3 விஐபி லவுஞ்கள் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய
கண்காணிப்பு கோபுரம் மூலம் ‘ரன்வேயின்’ எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும். இந்நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வந்த விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய விமான ஓடு பாதையை புதிய விமான முனையம் திறந்த பிறகும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட சில பெரிய ரக விமானங்கள் திருச்சிக்கு இயக்கப்படுவதில்லை.
அதற்கு காரணம் சிறிய ஓடுபாதை இருப்பதால், அந்த விமானங்கள் இறங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே தற்காலிகமாக இந்த ஓடு பாதையை விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற விமான நிலைய வளர்ச்சி பணிகள் குறித்த கூட்டத்தில் விமான ஓடு பாதையை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஓடு பாதை தற்போது 8,136 அடியாக உள்ளது.
ஓடு பாதையை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசிடமும், மாநில அரசிடமும் அனுமதி கேட்டு அதற்கான நில ஒதுக்கீடுக்கான அறிக்கை அனுப்பி இருந்தோம். அதன்படி மொத்தம் 512.59 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், அதில் 345.50 ஏக்கர் மாநில அரசிடம் கோரியிருந்தோம். அதில் 255.22 ஏக்கர் நிலத்தை விமான நிலையம் பயன்படுத்தி கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி கடிதம் கொடுத்துள்ளது. மேலும் 166.97 ஏக்கர் நிலம் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலமாக உள்ளது.
எனவே, மாநில அரசிடமிருந்து மீதம் உள்ள 90 ஏக்கரும், பாதுகாப்புதுறையிடம் உள்ள 166.97 ஏக்கரும் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள இந்த ஓடு பாதையில் இருந்து சுமார் 1,500 மீட்டர் அதிகப்படுத்த உள்ளோம். ஓடு பாதையை விரிவாக்கம் செய்தால், 12,500 அடி நீளம் உள்ள ஓடுபாதையாக அமையும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஓடு பாதையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 12,011 அடியும், 9,482 அடியும் உள்ள இரண்டு ஓடுபாதை உள்ளது.
இரண்டாவது இடத்தில் கோவை உள்ளது. அதில் 9,809 அடி நீளம் உள்ளது. 3வது இடத்தில் திருச்சி 8,136 அடியாக உள்ளது. 4வது இடத்தில் மதுரை 7,497 அடி நீளம் உள்ளது. திருச்சியின் ஓடு பாதையை 12,500 அடி நீளமாக அதிகரித்தால், தமிழ்நாட்டில் மிக நீளமான ஓடு பாதை உடைய விமான நிலையமாக திருச்சி மாறும். முக்கியமாக, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, ஐஎன்எஸ் ராஜாளிக்கு அடுத்தபடியாக நாட்டின் 5வது நீளமான ஓடுபாதையாக திருச்சி விமான நிலைய ஓடுபாதை அமையும். ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டால், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்’’என்றார்.
திருச்சி விமான நிலையத்தில் 12,500 அடியாக ஓடுபாதையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தமிழ்நாட்டின் மிக நீளமான ஓடு பாதையாகவும், நாட்டின் 5வது பெரிய ஓடுபாதையாகவும் மாற உள்ளது.