Skip to content

திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மனைவி மீனாட்சி(62) என்பவரது வீட்டில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி  தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில்  மீனாட்சி காயமடைந்து குத்தாலம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

தங்கசாமியின் மகன் அதிமுகவில் இணைய இருந்ததால்,  திமுகவினர் இந்த தாக்குதல் நடத்தியதாக மீனாட்சி  புகார் அளித்தார்.   அதிமுகவினர் தூண்டுதலின் பேரில் இந்த புகார் கூறப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்பட்டது.  இருப்பினும் மீனாட்சியை தாக்கிய வழக்கில் அதே பகுதியை சேர்ந்த  பிச்சைமுத்து மகன்கள் பி.சந்திரசேகர், திமுக முன்னாள் எம்எல்ஏ பி.கல்யாணம், கோவிந்தராஜ், முன்னாள் எம்எல்ஏ பி.கல்யாணம் மகன்கள் க.அன்பழகன் க.அறிவழகன் மற்றும் மனோகர், ரவி உள்ளிட்டோர் மீது குத்தாலம் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டம் 147, 294 (பி), 324 மற்றும் 506/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி கலைவாணி  நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ஒத்தி வைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீது ஆணை பிறப்பித்த நீதிமன்றம் வழக்கின் மேல்முறையீட்டுக்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான குத்தாலம் பி.கல்யாணம் கட்சியின் உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது மகன் குத்தாலம் க.அன்பழகன். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான இவர் திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!