திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன் கவுன்சிலர் அரவிந்தன்,மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
அடிமட்ட உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய எடப்பாடியார், தனது உழைப்பாலும், விசுவாசத்தாலும் இன்று கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இவர் தமிழகத்தில் 4ஆண்டுகாலம் முதல்வராக சிறப்பான ஆட்சியை தந்தார்.
2தொகுதிகளை கொண்டது திருச்சி மாநகர்மாவட்டம். அம்மாவை வெற்றிபெறச்செய்து, அம்மாவின் கோட்டையாக இருந்தது திருச்சி. இதனை மீண்டும் அதிமுக வின் கோட்டையாக மாற்ற கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த புரட்சி தலைவருக்கும், புரட்சி தலைவிக்கும் நன்றிக்கடனாக, வரும் 2026 தேர்தலில் அதிமுக வை வெற்றிபெறச்செய்யுங்கள்.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி எதிரணியினர் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை, சிவகாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்த நிலையில் புரட்சி தலைவர் தனது கடின உழைப்பால் அதிமுக வை ஆட்சிகட்டிலுக்கு கொண்டுவந்தார். சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்கு விகிதம் உயர்ந்துள்ளது. அதே தேர்தலில் திமுக வின் வாக்கு விகிதம் குறைந்து விட்டது. இதனை மனதில் கொண்டு சட்டமன்ற தேர்தலில் உழைத்து அதிமுக வை வெற்றிபெறச்செய்ய வேண்டும் . கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்தால் நாம் இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருப்போம். கருத்து வேறுபாட்டால் கடந்த வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
எடப்பாடியாருக்கு தெய்வத்தின் அருள் இருக்கிறது. 2நாளில் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் நடந்த வேளையில், நீதிமன்ற தீர்ப்பால் அவர் 4 ஆண்டு சிறைக்கு சென்றுவிட்டார். அவரை முதல்வராகவிடாமல் இறைவன் தடுத்துவிட்டார். இறைவன் வாய்ப்பு கொடுத்த எடப்பாடியாரை நாங்கள் ஆதரித்து வருகிறோம்.
தேனியில் தோல்வியுற்றவர் டி.டி.வி. இவரிடம் மைக்கை நீட்டினால் 2026 எடப்பாடியார் கட்சியை ஒழித்துவிடுவார் என்கிறார். டி.டி.வி என்ன ஜோதிடரா?
2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
.சசிகலா, டி.டி.வி தினகரன் ஓ பன்னீர்செல்வம் அனைவரும் செல்லாக் காசுகள்.இவர்களை அதிமுகவினர் அனைவரும் புறந்தள்ளுங்கள்.எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் சக்தியாக உருவெடுத்துவிட்டார். இனி யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.