மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு 3முறை ஐகோர்ட்டில் மனு செய்தும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுவரை அவருக்கு 33 முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இவை அனைத்தும் காணொளி மூலம் நடந்து வந்தது.
இந்த நிலையில் அவர் அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான அசல் ஆவணங்களை தன்னிடம் தரக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லியிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்காக இன்று அவர் பிற்பகல் 2.30 மணி அளவில் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு காரில் அழைத்து செல்லப்பட்டு 3 மணிக்கு நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் வந்தனர்.
அங்கு அவருக்கு அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான அசல் ஆவணங்கள் வழங்கப்பட்டது. அதைப்பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்திட்டு ஆவணங்களை அவர் பெற்றுக்கொண்டார். அத்துடன் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் வரும் 25ம் தேதி வரை அவருக்கு மேலும் காவல் நீடிக்கப்பட்டது. இத்துடன் 34வது முறை அவருக்கு காவல் நீடிக்கப்பட்டது. 25ம் தேதி காணொளி மூலம் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ெசந்தில் பாலாஜி சிறை க்கு அழைத்து செல்லப்பட்டார்.