அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தனது கட்சிக்கு முழுக்குபோட்டுவிட்டு நடிகர் விஜயின் தவெக கட்சியில் இணைகிறார். இதற்காக விஜயிடம் அவர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மா.பா. பாண்டியராஜன் 2000ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அதில் இருந்து விலகி தேமுதிகவில் சேர்ந்தார். 2011ல் விருதுநகரில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் அதிமுகவில் இணைந்து அமைச்சர் ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார். அங்கிருந்து எடப்பாடி அணிக்கு தாவினார். அதன் பிறகு அதிமுக இவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் கடந்த 2 வருடமாக பாண்டியராஜன் விருதுநகருக்கு இடம் பெயர்ந்து விட்டார்.
இப்போது புதிய கட்சியான தவெகவில் இணைய முடிவு செய்துள்ளாராம். இன்னும் 2 நாளில் அவர் நடிகர் விஜயை சந்தித்து அந்த கட்சியில் இணைய உள்ளார். விஜய் கட்சியில் இணைந்தால் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற உத்தரவாதத்தையும் அவர் விஜயிடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தனது கட்சிக்கு மாஜிக்கள் ஒருவரும் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த விஜய், பாண்டியராஜனை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.