ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று பகல் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் நேரு, பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கூட்டணி கட்சி தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக துரை வைகோ, விசிக திருமாவளவன், செல்வப்பெருந்தகை, ஜவாஹிருல்லா உள்பட பலர் பங்கேற்றனர். பதவியேற்ற இளங்கோவனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இளங்கோவன் ஏற்கனவே, கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருந்துள்ளார். தற்போது, 39 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.